ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாகையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: 28 பேர் கைது
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப் படுவதுடன், மக்களுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதால் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மேற்கொண்டது.
அதைதொடர்ந்து தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ் வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த நாகை வெளிப்பாளையம் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இளைஞர்கள் 28 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்காக போடப்பட்டிருந்த பந்தலையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.