ஊரக வேலை திட்டத்தில் கூடுதலாக 50 நாள் சேர்ப்பு: புதுக்கோட்டை கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கான வேலை நாட்களை, 100 நாட்களில் இருந்து 150 நாளாக உயர்த்தி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு:-
மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கான வேலை நாட்களை 100-ல் இருந்து 150 நாளாக உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவைவிட 62 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை நாட்களை 100-ல் இருந்து 150 நாளாக உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
அதன்படி, வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கப்பட உள்ளது. ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டை பணிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் போன்ற நீராதாரத்தை அதிகரிக்கும் வகையிலும், பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே 100 நாட்கள் பணி முடித்த புதுக்கோட்டை மாவட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கூடுதலாக 50 நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.