செய்திகள்

குடற்புழு மாத்திரை சாப்பிட்ட 24 மாணவ–மாணவிகள் வாந்தி, மயக்கம்

Published On 2017-02-11 22:58 IST   |   Update On 2017-02-11 22:58:00 IST
கறம்பக்குடி அருகே குடற்புழு மாத்திரை சாப்பிட்ட 24 மாணவ–மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே உள்ள ராங்கியம் விடுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 31 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் நேற்று 24 மாணவ–மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு பள்ளியில் மதிய உணவில் கீரை, முட்டை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. அதனை மாணவ–மாணவிகள் சாப்பிட்டனர்.

இதனைத்தொடர்ந்து பள்ளி முடிந்து 24 மாணவ–மாணவிகளும் வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய மாணவ–மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கறம்பக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் சென்று, பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளை ஏற்றி கொண்டு கறம்பக்குடி மற்றும் பட்டுகோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

தற்போது கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் ராங்கியம் விடுதி கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி மகள் செல்வபாரதி (வயது 6), தமிழ்செல்வன் மகன் பவன் (8), ராஜப்பாவின் மகள்கள் அபியா (6), ஆர்த்தி (7), ஆறுமுகம் மகள்கள் ஆசைபிரியா (9), அபிநயா (6) உள்பட 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராங்கியம் விடுதி கிராமத்தை சேர்ந்த ஆசா (11), முருகுபாண்டியன் மகள் பாரதி (10), திவாகரன் மகள் அபர்னா (10), பாலசுப்பிரமணியன் மகன் விஜய் (9), நம்பிராஜன் மகள் பிரியதர்ஷினி (8) உள்பட 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 24 மாணவ–மாணவிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரபரப்பு

இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஒவ்வாமை ஏற்பட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ–மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்ட குடற்புழு மாத்திரையை சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அறிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் கறம்பக்குடி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News