செய்திகள்

திருநல்லூரில் வருகிற 11-ந்தேதி பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி - முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரம்

Published On 2017-02-06 15:27 IST   |   Update On 2017-02-06 15:27:00 IST
விராலிமலை அருகே திருநல்லூரில் வருகிற 11-ந்தேதி பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.
விராலிமலை:

தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திருநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஜல்லிக்கட்டுக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொள்ளும்.

ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும் திரளான பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் மிகப்பெரிய திரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ராப்பூசல் கிராமத்தில் முதன் முதலாக கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

இதையடுத்து புகழ்பெற்ற திருநல்லூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குறிப்பிட்ட தேதியான தை மாதம் 29-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகமும், கிராம முக்கியஸ்தர்களும் ஆலோசித்து செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக ஜல்லிக்கட்டு திடலை தயார் படுத்தும் பணியும், பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

திருநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் ஜல்லிக்கட்டு திடலை ஆர்.டி.ஓ. வடிவேல் பிரபு, டி.எஸ்.பி. தமிழ்செல்வன், இலுப்பூர் தாசில்தார் தமிழ்மணி உள்ளிட்ட அதிகாரிகள் 3-ந்தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் பதிவு செய்யும் பணி நேற்று (5- ந்தேதி) தொடங்கப்பட்டது. முதல் நாளன்றே 200 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் காளைகள் வரை கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மாடுபிடி வீரர்கள் பதிவும் தொடங்கியுள்ளது குறிப்பிடப்படுகிறது.

சில ஆண்டுகளாக நீதிமன்ற தடையால் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு அரசு அனுமதியுடன் நடைபெற இருப்பதால் திருநல்லூர் கிராமமும், இலுப்பூர் சுற்று வட்டார கிராமங்களும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

Similar News