செய்திகள்

கோரிக்கை விடுத்தும் பலன் இல்லாததால் பொதுமக்களே அமைத்த பயணிகள் நிழற்குடை

Published On 2017-01-30 06:00 GMT   |   Update On 2017-01-30 06:00 GMT
மனு கொடுத்து விட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல் பொதுமக்களே முயற்சி செய்து பயணிகள் நிழற்குடை அமைத்ததை அப்பகுதியை சேர்ந்த பலரும் பாராட்டினர்.
அன்னூர்:

அன்னூர் ஊராட்சி ஒன்றியம், பொகளுர் கிராம பஞ்சாயத்தில் கோ பிராசிபுரம், கூளே கவுண்டன்புதூர் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கிராம மக்கள் தங்களது பஸ் வசதிக்காக அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மன்னாரன் கம்பெனி என்ற இடத்தில் இருந்து செல்ல வேண்டும். இந்த இடத்தில் அரசு சார்பில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் பஸ் ஒன்று நிலைதடுமாறி இந்த நிழற்குடை கட்டிடத்தை சேதப்படுத்தியது.

அதன் பின்னர் அந்த பகுதி பொது மக்கள் பல முறை அன்னூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பஞ்சாயத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் இது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பொறுமை இழந்த மக்கள், இனி தாங்களே பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்கள் தாங்களே முன்வந்து பயணிகள் நிழற் குடையை அமைத்தனர். இதற்காக குறைந்த செலவில் கட்டைகள், ஒலைகளை வைத்து வேய்ந்து அழகாக நிழற்குடையை வடிவமைத்துள்ளனர்.

தற்போது நிழற்குடையால் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் வெயிலின் தாக்கம் இல்லாமல் பயன் அடைந்து வருகிறார்கள்.

மனு கொடுத்து விட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல் பொதுமக்களே முயற்சி செய்து பயணிகள் நிழற்குடை அமைத்ததை அப்பகுதியை சேர்ந்த பலரும் பாராட்டி தெரிவித்தனர்.

Similar News