ஸ்ரீமுஷ்ணத்தில் விடிய விடிய கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
ஸ்ரீமுஷ்ணம்:
தென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி நேற்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் கனமழை கொட்டியது.
இந்த மழை இன்று காலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஸ்ரீமுஷ்ணத்தில் முக்கிய சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்தது. வீட் டிற்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வெளியேற்றிய வண்ணம் இருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கானூர், பேரூர், நகரபாடி, ஏத்தனூர், ராஜேந்திரபட்டிணம் உள்பட 30 கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையால் அந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, தண்ணீர் இல்லாமல் வறட்சியாக இருந்த காலத்திலும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிர்களை வளர்த்தோம். தற்போது பெய்த மழையால் அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என்றனர்.