செய்திகள்

விருத்தாசலம் அருகே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார கோரி பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2017-01-27 16:02 IST   |   Update On 2017-01-27 16:02:00 IST
விருத்தாசலம் அருகே கழிவுநீர் வாய்க்காலை தூர்வார கோரி கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ளது வயலூர். இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு முதல் இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழை தண்ணீர் கழிவுநீர் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மழை நீர் வீட்டிற்குள் புகுந்து விடும் சூழ்நிலை உருவானது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சரிவர தூர்வாராப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ரோடுகளில் தேங்கும் மழை நீர் கழிவுநீர் வாய்க்கால் வழியாக செல்லாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்கி உள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீசார் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News