செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

Published On 2017-01-26 14:55 GMT   |   Update On 2017-01-26 16:53 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர்:

வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் இங்கு பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கருகிவிட்டன. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் மகேஸ்வரன் தலைமையில் கணேஷ்ராம், ரத்தினபிரசாத், பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் வந்தனர். இந்த குழுவினர் நேற்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் முன்னிலையில் குன்னம் தாலுகா பேரளி, ஒதியம், குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள பருத்தி, மக்காச்சோள வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயிகள் கருகிய பருத்தி, மக்காச்சோள செடிகளை பிடுங்கி காண்பித்து மத்திய குழுவினரிடம் பயிர் சேதம் குறித்து முறையிட்டனர். 2015-ம் ஆண்டின் இறுதியில் பலத்த மழையினாலும், தற்போது கடும் வறட்சியாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகளிடம் வறட்சி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர், பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில் பேரளியில் பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, சந்திரகாசி எம்.பி., மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அய்யாசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ராஜாமணி, உதவி இயக்குனர் இந்திரா, குன்னம் வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News