செய்திகள்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி

Published On 2017-01-23 22:09 IST   |   Update On 2017-01-23 22:09:00 IST
அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ், விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கூறியதாவது:-

சாலை பாதுகாப்பு வார விழா மூலம் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழி முறைகள், உத்தரவு சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள் மற்றும் தகவல் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜனவரி 17 முதல் (23-ந்தேதி) வரை “சாலை பாதுகாப்பு வார விழாவாக” கொண்டாடப்பட்டு வருகிறது.

“உங்களின் பாதுகாப்பே உங்கள் குடும்ப பாதுகாப்பு, சாலையில் எச்சரிக்கையுடன் செல்வீர்” “ஓடும் வாகனத்துடனே தொடர்ந்து ஓடாதே” “சாலையில் கால்நடைகள் உலாவிட அனுமதிக்காதீர்” “சாலை குறியீடு பலகை மீது விளம்பரம் ஒட்டவோ, எழுதவோ கூடாது” “சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறு செய்ய வேண்டாம்” சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்யுங்கள்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்திவாறு மேற்கண்ட வாசகங்களை உரக்க கூறிக் கொண்டு, விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த பேரணியை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இம்மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து, விபத்துகள் நடைபெறாத மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தினை மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ், கூறினார்.

நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஊர்காவல் படையைச் சார்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Similar News