செய்திகள்

பழைய மாமல்லபுரம் சாலையில் 3-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Published On 2017-01-21 14:38 GMT   |   Update On 2017-01-21 14:38 GMT
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பழைய மாமல்லபுரம் சாலையில் 3-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
சோழிங்கநல்லூர்:

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி 3-வது நாளாக நேற்று பழைய மாமல்லபுரம் சாலை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட்ஜோசப், ஜேப்பியார், சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் செயின்ட் ஜோசப் கல்லூரி வாயில் எதிரே பழைய மாமல்லபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்கள் கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மட்டும் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் குமரன்நகர், சிக்னல், காரப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சோழிங்கநல்லூர் சிக்னல் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனங்கள் நுழைவு வாயில் அருகே சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரன்நகர் மற்றும் சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் பந்தல் அமைத்து தங்கள் குடும்பத்தினருடன் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்கள் குழந்தைகளுடன் வந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே தனியார் பல் மருத்துவமனை ஊழியர்களும் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர் துலுக்கானத்தம்மன் கோவில் அருகில் தனியார் சாப்ட்வேர் நிறுவன என்ஜினீயர்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள நாவலூர், சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், மேலகோட்டையூர், புதுப்பாக்கம், காலவாக்கம், திருப்போரூர், தண்டலம், மானாம்பதி, சிறுதாவூர் மற்றும் திருப்போரூர் ஆகிய இடங்களில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு தொழிற் சங்க அமைப்புகள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூரை சுற்றி உள்ள வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகில் போராட்டம் நடத்தினர். பின்னர் திருப்போரூர் பகுதியில் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று பஸ் நிலையம் வந்து மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் எலப்பாக்கம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோத்துப்பாக்கம் மற்றும் போந்தூர் கூட்ரோட்டில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Similar News