செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2-வது நாளாக கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

Published On 2017-01-20 20:34 IST   |   Update On 2017-01-20 20:34:00 IST
அரியலூர் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2-வது நாளாக நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இளைஞர்கள், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரின் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரம்பலூர் பாலக்கரை, பூலாம்பாடி, அன்னமங்கலம், வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முன்பு என பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே மாணவ-மாணவிகள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக நேற்று பெரம்பலூரில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஒரு அணியாக திரண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தையொட்டி அங்கு இரும்பு தடுப்புகள் மூலம் வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ‘மீசையை முறுக்கு... பீட்டாவை நொறுக்கு...’ என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் சாரை சாரையாக திரளான மாணவர்கள் பங்கேற்றதால் பெரம்பலூர் பாலக்கரை பகுதியே ஸ்தம்பித்து விட்டது. போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்து நெருக்கடியை சீர்செய்தனர்.

பெரம்பலூர் புது பஸ்நிலைய பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து தமிழ் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவரை பிணம் போல் படுக்க வைத்து அவரை பீட்டாவாக கருதி ஒப்பாரி வைத்தனர். அப்போது பீட்டாவை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.

குன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள வேப்பூர், கிழுமத்தூர், புதுவேட்டகுடி, வயலூர், கோவில்பாளையம் அண்ணாநகர், திருமாந்துறை ஆகிய கிராமங்களில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஜல்லிகட்டுக்கு தடையை நீக்க கோரியும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குளிர்பான பாட்டில்களை கீழே போட்டு உடைத்தும், குளிர்பானத்தை தரையில் கொட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், மதிய உணவு இடைவேளையின்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேப்பந்தட்டை பஸ்நிலையத்தில் காளைகளுடன் வந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். பூலாம்பாடி மேற்கு பஸ்நிலையம், அரும்பாவூர், பாலக்கரை உள்ளிட்ட இடங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக பூலாம்பாடி பகுதிக்கு நேற்று சரிவர பஸ்கள் விடப்படவில்லை.

அரியலூர் மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நடந்தது. மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், கிராம முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள் மீன்சுருட்டியில் ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பீட்டாவை தடை செய்யக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.

மீன்சுருட்டி அருகே காடுவெட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் வலி யுறுத்தினர்.

இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் கூறுகையில், இது ஒரு சில மணி நேரம் நடைபெறும் போராட்டம் அல்ல, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

Similar News