செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காஞ்சீபுரத்தில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம்

Published On 2017-01-18 15:11 IST   |   Update On 2017-01-18 15:11:00 IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காஞ்சீபுரத்தில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணையதளம் மூலம் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காஞ்சீபுரத்தில் நேற்று மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து நகராட்சி அலுவலகம் அருகில் திரண்டனர்.

அவர்கள் பஸ் நிலையம் வழியாக காமராஜர் வீதியில் பேரணியாக சென்றனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலந்து போகுமாறு கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து காஞ்சீபுரம், காமராஜர் வீதி மண்ணடி தெருவில் அமர்ந்தனர். விடிய விடிய அவர்களது போராட்டம் நீடித்தது.

இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகாலை முதல் மேலும் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் போராட்ட களத்திற்கு வந்தனர். ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளதால் அப்பகுதி யில் பரபரப்பாக காணப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட் டோர் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பீட்டா அமைப்பினை தடை செய்யக் கோரியும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை கைது செய்ததை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டு வருகின்றனர்,

மேலும் இணையதளம் மூலம் ஜல்லிகட்டுக்கு ஆதரவு திரட்டுமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கும் வரை தங்கள் போராட்டம் ஓயாது எனவும் தெரிவித்தனர்.

போராட்டம் நடை பெறும் இடத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் அண்ணா துரை, ஜெய்சங்கர், லட்சுமிபதி உள்பட ஏராளமான போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டை நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் இன்று காலையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, திருவள்ளூர் ஆயில் மில், திருவள்ளூர் டோல்கேட் ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் கலைந்து கோ‌ஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று திருவள்ளூர் ஆயில் மில்லில் ரெயில் நிலையம் வரை மனித சங்கிலியாக நின்று போராட்டம் நடத்தினர்.

அசம்பாவிதங்களை தடுக்க திருவள்ளூர் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதைபோல் பொன்னேரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 700 பேர் இன்று வகுப்புகளை புறக்கணித்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடினார்கள்.

பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணியாக சென்றனர். செங்கல்பட்டு பஸ் நிலையத்தை அடைந்ததும் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News