செய்திகள்

பெருந்துறை அருகே வீட்டில் டீ வைத்த போது உடல் கருகி வாலிபர் பலி

Published On 2017-01-16 20:14 IST   |   Update On 2017-01-16 20:14:00 IST
பெருந்துறை அருகே சமையல் அறையில் டீ போட ஸ்டவ்வை பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக தீ பிடித்ததில் வாலிபர் பலியானார்.

பெருந்துறை:

பெருந்துறை அருகே விஜயமங்கலத்தை அடுத்த மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு சுப்பிரமணியம் வேலையை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். தலை வலி இருந்ததால் டீ குடிக்க முடிவு செய்தார். சமையல் அறைக்கு சென்று டீ போட ஸ்டவ்வை பற்ற வைத்து பாத்திரத்தை வைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் சுப்பிரமணியம் சட்டையில் தீ பிடித்தது. சிறது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியது.

வேதனை தாங்காமல் சுப்பிரமணியம் அலறினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். மேலும் அருகில் இருந்தவர்களும் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்த சுப்பிரமணியம் உடலை பார்த்து அவரது மனைவியும் இரண்டு மகள்களும் அழுதது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

Similar News