செய்திகள்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி தி.மு.க. சார்பில் இன்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் அலுவலகம் அருகே ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.