செய்திகள்

வேதாரண்யம் அருகே பயிர்கள் கருகியதால் பெண் விவசாயி மயங்கி விழுந்து பலி

Published On 2017-01-04 15:56 IST   |   Update On 2017-01-04 15:56:00 IST
வேதாரண்யம் அருகே பயிர்கள் கருகியதால் இன்று பெண் விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு வாட்டாக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சேது (73). இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சம்பா சாகுபடி செய்து இருந்தார். ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது.

இன்று காலை சேது தனது வயலுக்கு சென்றார் பயிர்கள் கருகி இருப்பதை பார்த்து வேதனை அடைந்தார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஆலங்குடி ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (46). விவசாயி. இவர் அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தார். தண்ணீரின்றி பயிர்கள் வாடுவதை கண்ட அவர் மாரடைப்பால் இறந்தார்.

மதுக்கூர் அருகே உள்ள அத்து வெட்டி மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுச்சாமி (65). இவர் அப்பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்திருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் கருகியதை பார்த்த அவர் மாரடைப்பால் இறந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News