செய்திகள்

நாகையில் பயிர்கள் கருகியதால் 3 விவசாயிகள் உயிரிழப்பு

Published On 2017-01-03 10:28 GMT   |   Update On 2017-01-03 10:28 GMT
நாகையில் பயிர் கருகியதால் அதிர்ச்சியில் 3 விவசாயிகள் இறந்தனர். பயிர்கள் கருகியதால் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அரசாளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55) விவசாயி. இவர் சம்பா சாகுபடி செய்திருந்தார். கடைமடை பகுதி என்பதால் பம்பு செட் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.

ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கிணற்றில் தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் பயிர்கள் கருக தொடங்கியது. நேற்று வயலுக்கு சென்ற முருகேசன் பயிர்கள் கருகியதை பார்த்து வேதனை அடைந்தார். வீட்டிற்கு வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். செம்மங்குடி என்ற இடத்தில் சென்ற போது அவரது நிலைமை கவலைக்கிடமானது உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முருகேசனுக்கு ராஜி என்ற மனைவியும், 3 மகன், 3 மகள்கள் உள்ளனர்.

கீழ்வேளூர் அருகே உள்ள கிள்ளுக்குடி ஊராட்சி அய்யடி மங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (55). விவசாயி. இவர் 3 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது. நேற்று இரவு வயலுக்கு சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரை சேர்ந்தவர் முருகையன் (70). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் முருகையன் மன வேதனையில் இருந்தார். இன்று காலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவருக்கு குஞ்சம்மாள் என்ற மனைவியும், 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நாகை மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News