செய்திகள்

சீர்காழி அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் பலி: தந்தை போலீசில் புகார்

Published On 2016-12-31 15:22 IST   |   Update On 2016-12-31 15:22:00 IST
திருமணமான 4 மாதத்தில் வி‌ஷம் குடித்த புதுப்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சீர்காழி:

நாகை மாவட்டம், சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்த ராமையன் மகள் மஞ்சுளா (வயது 26). இவருக்கும், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைகுடி கிராமம் ராமன் கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் லோகநாதன் (27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மஞ்சுளா, தனது கணவர் லோகநாதனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கணவர் லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள், வீடு கட்ட பெற்றோரிடம் பணம் வாங்கி வர சொல்லி மஞ்சுளாவை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த மஞ்சுளாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மஞ்சுளா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மஞ்சுளாவின் தந்தை ராமையன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் மஞ்சுளாவுக்கு 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் உள்பட சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து கொடுத்ததாகவும், கணவர் லோகநாதன் புதிதாக வீடு கட்ட பணம் வாங்கிவா என மஞ்சுளாவை சித்ரவதை செய்ததால் தனது மகள் வி‌ஷம் குடித்து இறந்ததாகவும், மஞ்சுளா சாவுக்கு காரணமான கணவர் லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், நரசிம்மன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மஞ்சுளாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி தனி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News