செய்திகள்

கருப்பு பண விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய மந்திரி

Published On 2016-12-28 16:59 IST   |   Update On 2016-12-28 16:59:00 IST
கருப்பு பண விவகாரத்தில் அதிகாரிகள் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள். அவ்வாறு சிக்கும் அதிகாரிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பேட்டியளித்துள்ளார்.
கோவை:

கோவை கொடிசியாவில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறை இணை மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் பண புழக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் கிடைப்பதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் போதுமான அளவுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையால் அனைத்து விதமான தொழில்களுக்கும் சிறிய அளவில் பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்.

ஊழல் குற்றச்சாட்டு, கணக்கில் வராத பணம் இருப்பது தொடர்பாக வருமான வரித்துறைக்கு வரும் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் பா.ஜனதா தலையீடு இல்லை. இதில் ஒருதலை பட்சமாக செயல்படவில்லை. எங்கெல்லாம் பணம் பதுக்கி வைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருப்பு பண விவகாரத்தில் அதிகாரிகள் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள். அவ்வாறு சிக்கும் அதிகாரிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

திறன் மேம்பாட்டை வளர்க்க மெகா திட்டம் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மையங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பல நிறுவனங்களிடம் மிகப்பெரிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

6 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் வரக்கூடிய நிலையில் அதற்கு தேவையான ஓட்டுனர்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News