செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் 132-வது ஆண்டு விழாவில் 132 பேர் கூட இல்லை

Published On 2016-12-28 15:35 IST   |   Update On 2016-12-28 15:35:00 IST
சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் 132-வது ஆண்டு விழாவில் 132 பேர் கூட பங்கேற்கவில்லை என்று தொண்டர்கள் வருத்தப்பட்டனர்.
சென்னை:

காங்கிரஸ் கட்சியின் 132-வது ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். ஆனால் தமிழ்நாட்டில் இந்த விழாவை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை.

சத்தியமூர்த்திபவனில் இன்று நடந்த ஆண்டு விழாவில் இதை கண்கூடாக பார்க்க முடிந்தது. பொதுவாகவே ஒவ்வொரு கோஷ்டி தலைவர்களும் வரும் போதுதான் அந்தந்த தலைவர்களின் ஆதரவாளர்களும் வருவது வழக்கம்.

தற்போது மாநில தலைவர் திருநாவுக்கரசர் வெளிநாடு சென்று உள்ளார். அதனால் ஆண்டு விழா மூத்த தலைவர் குமரிஅனந்தன் தலைமையில் நடந்தது. அவர் கட்சி கொடியை ஏற்றினார்.

சேவா தள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பும் நடந்தது.

பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய தலைவர்கள் வராததால் தொண்டர்களும், முக்கிய நிர்வாகிகளும் வரவில்லை.

132-வது ஆண்டு விழாவில் 132 பேர் கூட பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தப்பட்டனர்.

Similar News