சீர்காழியில் ஏ.டி.எம்-மில் பணமில்லாததால் பொதுமக்கள் முற்றுகை
சீர்காழி:
சீர்காழியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்து பொதுமக்களும் தினந்தோறும் ஏ.டி.எம்.மிற்கு சென்று பணம் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் வருகின்றனர். ஒரு சில ஏ.டி.எம் மையங்களில் குறைவான அளவு பணம் வைக்கப்படுவதால் சிறிது நேரத்தில் பணம் தீர்ந்து விடுகிறது. இதனால் அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது.
நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ஏ.டி.எம் மையங்களில் வரிசையாக பணம் எடுக்க காத்திருந்தினர். ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் போதிய அளவு பணம் இல்லாததால் வரிசையில் நின்றவர்கள் பணம் எடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் பல நாட்களாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று பழைய பேருந்துநிலையம் எதிரே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் இல்லாததால் அங்கு இருந்த பொதுமக்கள் ஏ.டி.எம் மையத்தை முற்றுகையிட்டு உடனடியாக பணம் நிரப்ப வேண்டுமென கோஷம் எழுப்பினர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.