செய்திகள்

சத்தியமங்கலம் அருகே மீண்டும் இன்று ஊருக்குள் புகுந்து சிறுத்தை

Published On 2016-12-23 17:30 IST   |   Update On 2016-12-23 17:30:00 IST
சத்தியமங்கலம் அருகே மீண்டும் இன்று ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி பண்ணாரி அருகே உள்ள ராஜன்நகர் ஊராட்சியையொட்டி அடர்ந்த காடு உள்ளது.

இந்த காட்டுக்குள் சமீபகாலமாக காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள், குரங்குகளை சிறுத்தைகள் விரட்டி வேட்டையாடி வருகிறது. அப்படி விரட்டி வரும் சமயத்தில் ஊர் ஓரம் உள்ள ஆட்டு- மாட்டு தொட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடு- மாடுகளையும் சிறுத்தைகள் அடித்து தின்று வருகிறது.

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து 2 ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை சிறுத்தை அடித்து தின்று விட்டு சென்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் ராஜன்நகரை அடுத்த கஸ்தூரிநகரில் உள்ள துரைசாமி என்பவரது ஆட்டு பட்டிக்குள் ஒரு சிறுத்தை புகுந்தது.

அந்த பட்டியில் 5 ஆடுகள் இருந்தது. இதில் ஒரு ஆட்டின் மீது பாய்ந்து கடித்து அந்த சிறுத்தை குதறியது. ஆட்டின் சத்தத்தை கேட்டதும் வீட்டியிலிருந்து வெளியே வந்த துரைசாமியின் மனைவி அமராவதி, இதை பார்த்து திடுக்கிட்டு சத்தம் போட்டார்.

அவரது சத்தத்தை கேட்டு அந்த சிறுத்தை அங்கிருந்து பாய்ந்து காட்டுக்குள் புகுந்து விட்டது. அவர் மட்டும் வெளியே வந்து சத்தம் போட்டிருக்காவிட்டால் மீதி உள்ள 4 ஆடுகளையும் அந்த சிறுத்தை கொன்று இருக்கும். சிறுத்தை தாக்கிய ஆடு ஆபத்தான நிலையில் உள்ளது.

ராஜன்நகர் பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

இதனால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாடவும் பயப்படுகிறார்கள். ஊருக்குள் புகுந்து ஆடுகளையும், மாட்டையும் அடித்து வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News