செய்திகள்

குத்தாலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2016-12-23 16:59 IST   |   Update On 2016-12-23 16:59:00 IST
குத்தாலம் அருகே காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர். போராட்டத்தால் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குத்தாலம்:

குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தங்குடி, மாதா கோவில் தெரு, அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு, தோப்பு தெரு ஆகிய பகுதிகளில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறது. இங்கு கடந்த 1 வருடமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதில் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மயிலாடுதுறை- திருவாரூர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இப்பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் சாலை அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் எலந்தங்குடி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News