செய்திகள்

பவானிசாகர் பகுதியில் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம் - 200 வாழைகள் நாசம்

Published On 2016-12-23 15:07 IST   |   Update On 2016-12-23 15:07:00 IST
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் ஒற்றை யானை அட்டகாசத்தால் 200 வாழைகள் நாசம் அடைந்தன.
பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து நேற்று முன்தினம் ஒரு ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது. இந்த யானை பவானிசாகர்- புளியம்பட்டி ரோட்டில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளையும் பொது மக்களையும் பயமுறுத்தியது. பிறகு அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வந்து வானவெடிகளை வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

அதே ஒற்றை யானை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. பு.புளியம்பட்டி அருகே உள்ள கோடேபாளையம் செல்வம் என்பவரது வாழை தோட்டத்துள் புகுந்தது.

இதைக்கண்ட செல்வம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் ஒரு மணிநேரம் போராடி பட்டாசுகள் வெடித்து அந்த யானையை காட்டுக்குள் விரட்டினர். அதிகாலை 3 மணிக்கு புகுந்த அதே யானை மீண்டும் 4 மணிக்கு காட்டை விட்டு வெளியேறி செல்வம் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு நன்கு விளைந்திருந்த 200-க்கும் மேற்பட்ட ரஸ்தாளி வாழைகளை அந்த யானை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது.

ஊர் மக்களுடன் வன ஊழியர்களும் சேர்ந்த பட்டாசுகளை வெடித்து விரட்டினர். ஆனால் ருசி கண்ட அந்த யானையோ காட்டுக்குள் செல்லாமல் அடம் பிடித்தது. பிறகு ஒரு வழியாக 6 மணிக்கு விளாமுண்டி வனத்துக்குள் புகுந்தது.

Similar News