செய்திகள்

பள்ளி மாணவியிடம் அய்யப்ப மாலையை கழற்றக்கூறிய ஆசிரியையிடம் விசாரணை

Published On 2016-11-29 11:44 GMT   |   Update On 2016-11-29 11:44 GMT
திருப்பத்தூர் அருகே பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவியிடம் அய்யப்ப மாலையை கழற்றக்கூறிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த திம்மணாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் பல்லவி (வயது 11) 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது அவள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக அய்யப்ப மாலை அணிந்துள்ளாள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்லவி பள்ளிக்குச் சென்றுள்ளாள். வகுப்பறையில் பாடம் கற்பித்த ஆசிரியை, பல்லவியிடம் டாலருடன் இணைக்கப்பட்ட அய்யப்ப மாலையையும், தோளில் அணிந்திருந்த மேல்துண்டையும் கழற்றக்கூறியதாக தெரிகிறது.

அத்துடன், மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலும் பேசி, பல்லவியை வகுப்பறையில் இருந்து பாதியில் வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி மாணவி பல்லவி, பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து வீட்டுக்குச் சென்று தனது பெற்றோரிடமும் கூறினார். ஆசிரியை மீது மாணவி தனது பெற்றோருடன் வந்து திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பிரியதர்ஷினியிடம் புகார் செய்தார். அதற்கு அவர், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இது குறித்து சம்மந்தபட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தபட்டது. விசாரணை அறிக்கை முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News