செய்திகள்

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் வீட்டுமனை - தங்கத்தின் விலை குறையும்: ஹெச்.ராஜா பேட்டி

Published On 2016-11-23 16:19 IST   |   Update On 2016-11-23 16:19:00 IST
500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இன்று திருமண மண்டபங்களின் வாடகை கட்டணம் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் வீட்டு மனை மற்றும் தங்கத்தின் விலை குறையும் என்று ஹெச் ராஜா கூறினார்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ரெயில்வே அகலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் புதுவாகோட்டை மேற்கு குடியிருப்பு பகுதியில் ரெயில்வே பாதை உயரத்தில் அமைக்கப்பட்டு வருவதால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளரும், ரெயில்வே பயணிகள் நலக்குழு தலைவருமான ஹெச்.ராஜாவிடம் புகார் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த ஹெச்.ராஜா, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறும் போது, 30-ந்தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபுவிடம் எடுத்துக் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இன்று திருமண மண்டபங்களின் வாடகை கட்டணம் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் வீட்டு மனை மற்றும் தங்கத்தின் விலை குறையும்.

பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள் முன்பு ஏழை மக்கள் நிற்பது மத்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதற்கு காரணம் அவர்கள் தங்கள் சொந்த பணத்தை மாற்ற வருகின்றனர். மத்திய அரசு நடவடிக்கையினால் கள்ளப்பணம், கருப்பு பணம் பயங்கரவாதிகளின் பணம் ஒரே நாளில் ஒழிக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முக்கிய காரணம் நாட்டு மாடுகள் இனங்கள் அழிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் மகிழ்ச்சியே. பாதகமாக வரும் பட்சத்தில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்க முடியும்.

கடந்த 4 ஆண்டுகளாகவே தே.மு.தி.க. தேய்ந்து வந்தது. பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம்.ஆனால் அவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை. பா.ஜனதா, பா.ம.க. மட்டுமே தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. தற்போது தே.மு.தி.க. இல்லாத நிலை உள்ளது.

முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு ரெயில்வே திட்டங்களை அறிவித்ததோடு சரி. ஆனால் நிதி ஒதுக்கவில்லை. பல்வேறு ரெயில்வே பணிகள் கிடப்பில் கிடந்தன. அதனை நிறைவேற்றுவதற்காகத்தான் ரெயில்வே கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு அரசு வந்தது. ரெயில்வே திட்டங்களையும் அறிவிக்கவில்லை.தற்போது கிடப்பில் கிடக்கும் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2017-க்குள் திருவாரூர்- காரைக்குடி இடையே அகலப்பாதைப்பணி முடிவடைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அறந்தாங்கி நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் முரளிதரன், ஒன்றிய தலைவர் ஆதிமூலம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Similar News