அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 252 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் “தகவல் வளக்கையேட்டினை” கலெக்டர் சரவண வேல்ராஜ் வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தாய், தந்தையரை இழந்த மற்றும் பல் வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 41 குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் வாழ் வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவியாக தலா 1 குழந்தைக்கு மாதம் ரூ.2000 வீதம் 7 மாதங்களுக்கு 41 குழந்தைகளுக்கு ரூ.5 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அரியலூர் மற்றும் தா.பழூர் வட்டாரங்களைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு தலா ரூ.2800 வீதம் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான விளக்கு பொறியினையும்,
தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த 26 விவசாயிகளுக்கு மண்வள அட்டையினையும், மாவட்ட ஆட்சியரகம் சிறுசேமிப்பு பிரிவின் கீழ் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 51 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் என மொத்தம் 128 நபர்களுக்கு ரூ.6 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டகலெக்டர் சரவண வேல்ராஜ்வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரெங்கராஜன்,துணை ஆட்சியர் (சமூகநல பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், மாட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு திட்டம்) அருள்மொழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்முகமது யூனுஸ் கான், சிறைத்துறை நன்ன டத்தை அலுவலர் அசோக், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்புராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.