செய்திகள்

தேவகோட்டையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 20 பவுன் கொள்ளை

Published On 2016-11-06 17:15 IST   |   Update On 2016-11-06 17:15:00 IST
ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் வீட்டில் மர்ம மனிதர்கள் புகுந்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் குறுக்கு வீதியை சேர்ந்தவர் மணி (வயது65). இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது உறவினர்கள் திருவேகம்பத்தூர் பகுதியில் உள்ளனர். அங்கு நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணி குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் 2 நாட்கள் கழித்து அவர்கள் நேற்று வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணி உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடக்க அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதனால் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பதை அறிந்த அவர் தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக மணி தெரிவித்தார்.

இதற்கிடையில் அவரது வீட்டின் அருகே உள்ள திவ்யநாதன் என்பவரது வீட்டிலும் மர்ம மனிதர்கள் புகுந்து 2 பவுன் நகையை திருடியுள்ளனர். அந்த வீட்டிலும் யாரும் இல்லை. மேலும் மற்றொரு வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைய முயன்றபோது அங்கிருந்தவர்கள் உஷாராகி மின் விளக்குகளை போட்டுள்ளனர்.

இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அடுத்தடுத்த வீடுகளில் ஒரே நேரத்தில் மர்ம மனிதர்கள் கைவரிசை காட்டியிருப்பது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவேகானந்தபுரம் பகுதி முக்கிய அரசு அலுவலர்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை நடந்த வீடுகளில் சிவகங்கை மாவட்ட தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளி களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News