செய்திகள்

வேலூர் சாலையில் பாம்பு: பாலமதி காட்டில் விடப்பட்டது

Published On 2016-11-01 17:09 IST   |   Update On 2016-11-01 17:09:00 IST
வேலூர் சாலையில் பொதுமக்கள் பிடித்த பாம்பை வன துறையினர் பாலமதி மலைக்கு கொண்டு சென்று காட்டில் விட்டனர்.

வேலூர்:

வேலூர் பேலஸ் கபே அருகே நேற்று இரவு 8 மணி அளவில் சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு சிக்கியது.

இதில் காயமடைந்த அந்த பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று அருகில் உள்ள கடைக்குள் புகுந்துவிட முயன்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வியாபாரி கடையின் ‌ஷட்டரை இழுத்து மூடினார். தொடர்ந்து அந்த பாம்பு கடை வாசலில் தஞ்சம் அடைந்தது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்க தொடங்கினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த வாலிபர் ஒருவர் வனத்துறையிடம் ஒப்படைப்பதாக கூறி ஒரு பையை கொண்டு வந்து பாம்பை பிடித்து சென்றார்.

பாம்பை வேலூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வன துறையினர் பாலமதி மலைக்கு கொண்டு சென்று பாம்பை காட்டில் விட்டனர்.அது மெதுவாக காட்டுக்குள் ஊர்ந்து சென்றது.

பாம்பு பிடிக்கப்பட்ட சம்பவத்தை ஏராளமானோர் செல்போனில் படம் பிடித்தனர். அதனை வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளனர்.

Similar News