செய்திகள்

வரதட்சணை கொடுமையால் பெண் விஷம் குடித்தார்: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2016-09-22 23:09 IST   |   Update On 2016-09-22 23:09:00 IST
வரதட்சணை கொடுமையால் பெண் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது சம்பவம் குறித்து 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி பெரிய முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிமீனாள். இவருக்கும் கூத்தகுடியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 11 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்முகம், தனது மனைவி பாண்டிமீனாளிடம், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல கூடுதல் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி உள்ளார். இதற்கு உடந்தையாக அவருடைய தகப்பனார் சின்னான், தாயார் மறத்தி ஆகியோர் இருந்துள்ளனர். இதனால் பாண்டிமீனாள் தனது தந்தை வீட்டிற்கு வந்து யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் சண்முகம், சின்னான், மறத்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News