செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவு

Published On 2016-09-20 10:45 GMT   |   Update On 2016-09-20 10:45 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், விராச்சிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து முன்னிலையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராச்சிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் இதர மருத்துவப்பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளை தினமும் சரியான முறையில் பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கவும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும் வகையில் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி அரசு மருத்துவமனையில் அதிக பிரசவங்களை மேற்கொள்ளவும், மருத்துவப்பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான முறையில் உயர்தர சிகிச்சை அளித்திட சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் கூறினார்.

அவர் கீரனூர் அரசு தாலுகா மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து, பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகத்தையும் வழங்கினார்.

இந்த ஆய்வில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ராமையா, நகர்மன்றத்தலைவர் இரா.ராஜசேகரன், திருமயம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமு, ஆத்மா குழுத்தலைவர் பால்ராஜ், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News