செய்திகள்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-09-20 02:10 GMT   |   Update On 2016-09-20 02:10 GMT
அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது குறித்து அக்டோபர் மாதத்துக்குள் முடிவு எடுக்கவேண்டும் என்றும், அடுத்த விசாரணையின்போது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்ச இடவசதி இருந்தால் மட்டுமே மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசாணை உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தமிழக பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக 2 அரசாணைகளை பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன்கருதி கடந்த மே 31-ந் தேதி வரை தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது. இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை முறைப்படுத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது. அங்கீகாரம் வழங்கப்படாத 746 பள்ளிகளில், விதிமுறைகளை பூர்த்தி செய்த பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது குறித்து ஏற்கனவே அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்க இன்னும் 2 மாதம் அவகாசம் வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘நிபுணர்கள் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவுகள் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வரும் நவம்பர் 7-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Similar News