செய்திகள்

காவிரி நதிநீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- சட்டமன்ற காங்.தலைவர் வலியுறுத்தல்

Published On 2016-09-14 12:31 IST   |   Update On 2016-09-14 12:31:00 IST
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறினார்.

காரைக்குடி:

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறினார்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது.

இப்போது கர்நாடகத்தில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். தமிழக மக்கள் கர்நாடகத்திலே கடுமையாக தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் உடமைகள், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது நீதிமன்றம் அளித்த தீர்ப்பே தவிர இருமாநில அரசுகளின் முடிவு அல்ல. நதிநீர் பங்கீட்டை பொறுத்தவரை கர்நாடகத்தின் அணைகளில் உள்ள தண்ணீரில் ஏறத்தாழ 57 சதவீதம் தண்ணீர் தமிழகத்திற்கு உண்டானது. அதில் கேரளாவுக்கு 4 சதவீதமும், புதுவைக்கு ஒரு சதவீதமும் பங்கு போக மீதி தமிழ்நாட்டிற்குதான். இதுவரை அவர்கள் தமிழகத்திற்கு 60 டி.எம்.சி. தண்ணீர் தந்திருக்க வேண்டும். 30-35 டி.எம்.சி.தான் தந்துள்ளார்கள். முழுமையாக தண்ணீரை தந்தால்தான் தஞ்சை பகுதியிலே விவசாயம் செய்ய முடிவும். அரசு போதிய தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பதே நல்லது. எங்களுடைய வாழ்வாதார உரிமையை நாங்கள் விட்டு தரமாட்டோம். சட்டத்திற்கு உட்பட்டுதான் தண்ணீர் கேட்கிறோமோ தவிர மீறி அல்ல.

எனவே இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். தவிர இதனால் அப்பாவி விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கக் கூடாது.

அதேபோல் தமிழக முதல்வரும் அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி அனைவரின் எண்ணத்தையும் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் தட்டிக் கழிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

தமிழக அரசு இங்கு நடைபெறுவதை மத்திய அரசிடம் அழுத்தம் தந்து கூற வேண்டும். காவிரி பிரச்சினையில் தலையிடமாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுவது ஏற்புடையது அல்ல. இருவர் இறந்துள்ளார்கள். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை எரித்துள்ளார்கள்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் உடனடியாக உள்துறை அமைச்சர் மூலம் தலையிடுபவர்கள், காவிரி பிரச்சினையால் ஏன் தலையிடவில்லை.

மேலும் இன்னும் சில தினங்களில் எனது தலைமையில் தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கூடி காவிரி நதிநீர் சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்க இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு தமிழக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி, குமரேசன் மற்றும் பலர் இருந்தனர்.

Similar News