செய்திகள்

தோட்டக்கலை மானியத்தின் மூலம் விவசாயிகள் பயனடையலாம்: கலெக்டர் அறிவிப்பு

Published On 2016-09-10 19:46 IST   |   Update On 2016-09-10 19:46:00 IST
தோட்டக்கலை மானியத்தின் மூலம் விவசாயிகள் பயனடையலாம் என புதுக்கோட்டை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.91.72 கோடி செலவினத்தில் 22 மாவட்ட ங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.3.4922கோடி செலவினத்தில் செயல்படுத்தப்படவுள்ளன.

தோட்டக்கலை பயிர்களில் வீரிய ஓட்டு இரக காய்கறிகள், மிளகாய், மா, கொய்யா, திசுவாழை, முந்திரி, மல்லிகை, சாமந்தி, மிளகு ஆகியவற்றில் புதிய தோட்டங்கள் அமைப்பதற்கு ரூ.87.91 லட்சம் செலவில் 520 எக்டர் பரப்பிற்கு 40 சதம் மானியமும், பப்பாளி, எலுமிச்சை போன்ற பயிர்களுக்கு 50 சதம் மானியமும் வழங்கப்படுகிறது.

பசுமைக்குடில்கள், நிழல்வலைகுடில்கள், பறவை தடுப்பு வலை மற்றும் நிலப்போர்வை போன்ற உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட சாகுபடி இனத்திற்கு ரூ.63.325 லட்சம் செலவினத்தில் பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலைகுடில்கள் 14000 சதுர மீட்டர் பரப்பிலும், நிலப்போர்வை 50 எக்டர் பரப்பிலும் 50 சதம் மானியத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பண்ணை இயந்திரங்களான மினி டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் தெளிப்பான்கள் 25 சத மானியம் முதல் 50 சத மானியம் வரை அனுமதிக்கப்ட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.3.875 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சதம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு போன்றவை செயல் படுத்தப்பட உள்ளன.

தோட்டக்கலை பயிர்களுக்கான சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மானியத்துடன் கூடிய ஊரக சந்தை, சில்லறை விற்பனை நிலையம் மற்றும் நடமாடும் விற்பனை நிலையம் அமைக்க விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்காக ரூ.12.750 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் வழங்கிய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News