செய்திகள்

திருப்பத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்: 4 வாலிபர்கள் கைது

Published On 2016-09-09 17:20 IST   |   Update On 2016-09-09 17:20:00 IST
திருப்பத்தூரில் விநாயகர் ஊர்வலத்தில் நடந்த மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கவுன்சிலரின் மகன் தலைமறைவானார்.

திருப்பத்தூர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பத்தூர் பாரதி ரோட்டில் 24 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை பக்தர்கள் பூஜை செய்து, நேற்று செட்டிதெரு, நகை கடை பஜார் வழியாக எடுத்து வந்தனர்.

செட்டிதெருவில் உள்ள மசூதி அருகில் ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது, திருப்பத்தூர் அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இதாயத் (வயது 26) என்பவர் அங்கு செல்போன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது ஊர்வலத்தில் சென்றவர்களில் சிலர் தகராறில் ஈடுபட்டு, இதாயத்தை அடித்து உதைத்தனர். படுகாயம் அடைந்த இதாயத் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இதாயத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 25-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதே ஊர்வலத்தில் திருப்பத்தூர் ஜார்ஜ்பேட்டையை சேர்ந்த உதயகுமார் (22) என்ற வாலிபரும் தாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்தும், இதாயத் தாக்கப்பட்டது குறித்தும் திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதாயத் தாக்கப்பட்டது தொடர்பாக பாரதி ரோட்டை சேர்ந்த தாமோதரன் மகன் ஜீவா என்கிற சுந்தர்ராஜன் (35), தியாகராஜன் மகன் ஜெகதீசன் (26) சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் சுரேஷ் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல உதயகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக ஜார்ஜ்பேட்டையை சேர்ந்த ஜோதிவேல் மகன் நவீன் குமார் (22), பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன் (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் நவீன்குமார் கைது செய்யப்பட்டார். சீனிவாசன் தி.மு.க. நகர் மன்ற உறுப்பினரான சரவணன் என்பவரது மகன் ஆவார். அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News