உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் 2525 வாக்குப்பதிவு மையங்கள்: கலெக்டர் கணேஷ் தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் 2016ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் வரைவு பட்டியல்களின் மீதான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 24.10.2016 உடன் நிறைவடைய உள்ளதால் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளாட்சி சாதாரண அக்டோபர் 2016ல் நடத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கியுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குச் சாவடிகளில் வரைவு பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கால அட்டவணையின்படி வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஊரகப்பகுதிகளில் 2252 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற பகுதிகளில் 273 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரகப்பகுதிகளுக்கு வாக்கு சீட்டு முறைகளும் பயன் படுத்தப்படவுள்ளது.
நகர்ப்பகுதிகளில் 1200 வாக்காளர்களுக்கு 1வாக்குச் சாவடியும், ஊரகப் பகுதிகளில் 1000 வாக்காளர்களுக்கு 1 வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளதுடன் நகர்ப்பகுதிகளில் 1 வார்டுக்கு குறைந்தபட்சம் 1 வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்கள் எண்ணிக்கை 1200க்கும் மேல் இருக்கும் பட்சத்தில் தேவைக்கேற்ப கூடுதல் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 638 ஒரு வார்டு வாக்குச்சாவடிகளும், 1614 இரு வார்டு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஆண் வாக்குச்சாவடிகள் 36ம், பெண் வாக்குச் சாவடிகள் 36ம், அனைத்து வாக்காளர்கள் 2180ம் என மொத்தம் 2252 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நகராட்சிகளில் ஆண் வாக்குச்சாவடிகள் 53ம், பெண் வாக்குச் சாவடிகள் 53ம், அனைத்து வாக்காளர்கள் 167ம் என மொத்தம் 273 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அதிகபட்சம் 2 கி.மீ சுற்றளவிற்குள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர் பட்டியல்களில் ஏதேனும் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக உரிய படிவங்களில் பூர்த்தி செய்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் (வருவாய் கோட்ட அலுவலர்கள்) விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.