செய்திகள்

காவிரியில் தண்ணீர் விட விவசாயிகள் எதிர்ப்பு: கர்நாடகத்துக்கு தமிழக பஸ்கள் நிறுத்தம்

Published On 2016-09-06 11:35 IST   |   Update On 2016-09-06 11:35:00 IST
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறி கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம்-கர்நாடகம் இடையே முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம்:

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாநில விவசாயிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறி வருகிறார்கள். கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மாண்டியா மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கர்நாடகா விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

இதனால் நேற்று மதியம் முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர், தாளவாடி வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மைசூர், பெங்களூர், கொல்லேகாலுக்கு இந்த பஸ்கள் அனைத்தும் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்கள் தமிழக எல்லையான தாளவாடி வரை செல்கிறது.

இதே போல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள் அந்த மாநில எல்லையான புளிஞ்சூர் வரை வந்து திரும்பி செல்கிறது.

தாளவாடி அருகே உள்ள சாம்ராஜ்நகர் நஞ்சன் கூடு, மைசூர் ஆகிய இடங்களில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள தமிழக வியாபாரிகள் முன் எச்சரிக்கையாக கடைகளை அடைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து மலைப்பகுதி தொடங்குகிறது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் கர்நாடகாவுக்கு செல்லும்.

இவை அனைத்தும் பண்ணாரி சோதனை சாவடியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு 60 பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை முதல் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை.

தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான புஞ்சூர் பகுதியில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லைப்பகுதியில் இருந்து உள்ளூர் பஸ்கள் மூலம் பொதுமக்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் கர்நாடக போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி முடிந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் நேற்று காந்திபுரம் பஸ் நிலையத்தில் திரளாக காத்திருந்தனர்.

இரவில் ஒரு சில பஸ்களே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கோவையில் இருந்து பெங்களூரு, மைசூருக்கு சேலம் வழியாக செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்கள் ஓசூர் வரை மட்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

கர்நாடகாவில் பதட்டம் நிலவுவதால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இன்று 2-வது நாளாக வாகனங்கள் அனைத்தும் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டன. ஒரு சில வாகனங்கள் எல்லை பகுதியான கக்கனல்லாவில் நிறுத்தப்பட்டன.

இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். சில மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் அவர்கள் நடந்து சென்று, பஸ் மாறி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு சென்றனர்.

தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் 300-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படவில்லை.

3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று பெங்களூருக்கு தமிழக பயணிகள் ஏராளமானோர் புறப்பட்டனர். ஓசூரில் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டதால் இரவு முழுவதும் காத்து கிடந்தனர்.

கர்நாடகாவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்கள் மட்டும் வழக்கம் போல இயக்கப்பட்டன. இதனால் அந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று காலையிலும் தமிழக பஸ்கள் இயங்காததால் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலக பணி மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோர் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை நீடித்தது.

இதே போல சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக மைசூர் செல்லும் தமிழக பஸ்கள் கொளத்தூரை அடுத்த பாலாறு சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக மேட்டூர், ஈரோடுக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்களும் பாலாறு சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன.

தமிழகம்-கர்நாடகம் இடையே முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு வாகனங்களில் வந்துள்ள வெளி மாநில டிரைவர்களும், கிளீனர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவித்தபடி உள்ளனர்.

இதன் காரணமாக கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கர்நாடக மாநில எல்லைகளில் பதட்டம் நிலவுகிறது.

Similar News