செய்திகள்

கொல்லம்பாளையத்தில் வீட்டு கதவை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை

Published On 2016-09-04 16:19 IST   |   Update On 2016-09-04 16:19:00 IST
கொல்லம்பாளையத்தில் வீட்டு கதவை உடைத்து ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஈரோடு:

ஈரோடு கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் காசிநாதன். இவர் தனியார் முட்டை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள்.

இவர்களுக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. கணவன்- மனைவி இருவரும் கரூரில் நடந்த பேத்தி காது குத்து விழாவுக்கு நேற்று வீட்டை பூட்டி கொண்டு புறப்பட்டு சென்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் இவர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். உள்ளே மேஜை டிராயரில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்தனர். அதன் பிறகு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் தங்கி இருந்த வக்கீல் வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு எதுவும் கிடைக்காததால் ஓட்டம் பிடித்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி தகவல் கிடைத்தததும் சூரம்பட்டி போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. இந்த கொள்ளை குறித்து கரூர் சென்ற காசிநாதன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்தனர். வீட்டு கதவு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News