செய்திகள்

காரைக்குடி அருகே வி‌ஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2016-08-21 12:16 IST   |   Update On 2016-08-21 12:16:00 IST
கபடி போட்டியில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்.
காரைக்குடி:

கபடி போட்டியில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் கோபிநாத் (வயது23). இவர் அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.

கபடி வீரரான கோபிநாத் தனது அணியுடன் ராமேசுவரத்தில் நடைபெற்ற ஒரு கபடி போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இங்கு நடைபெற்ற போட்டியில் அவரது அணி தோல்வியடைந்தது.

இதனால் மனவேதனை அடைந்த கோபிநாத் அணியினரிடம் சொல்லிக் கொள்ளாமல் தனியாக ஊருக்கு புறப்பட்டு விட்டார். தோல்வியின் விரக்தியில் இருந்த அவர் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து வி‌ஷம் குடித்த நிலையில் பஸ்சில் பயணம் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த செக்காலைக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி வீராச்சாமி, அவரது உதவியாளர் பானுமதி ஆகியோர் கோபிநாத்தை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கோபிநாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News