செய்திகள்

நாகை பகுதியில் 2 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு

Published On 2016-08-08 15:43 IST   |   Update On 2016-08-08 15:43:00 IST
நாகை பகுதியில் 2 பெண்களிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், நாகூர் வடக்கு வீதி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி உமாமகேஸ்வரி (வயது31). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு பின்புறத்தில் இருந்து வந்த ஒரு மர்ம நபர் உமா மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு அருகில் தயாராக நின்று கொண்டிருந்தவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகை வேதநாயகம் செட்டித் தெரு பகுதியை சேர்ந்த காளிதாசன் மனைவி அருணாராணி (42) என்பவர் வீட்டில் உள்ள குப்பையை எடுத்துக்கொண்டு தெரு முனையில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் அருணாராணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் அருணாராணி சத்தம்போட்டு மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது, நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்கில் வைத்திருந்த ஹெல்மெட் கீழே விழுந்தது. அந்த ஹெல்மெட்டை அவர்கள் எடுக்காமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அருணாதேவி கொடுத்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் விட்டு சென்ற ஹெல்மெட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News