செய்திகள்

மணமேல்குடி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி

Published On 2016-07-27 12:05 IST   |   Update On 2016-07-27 12:05:00 IST
மணமேல்குடி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

மணமேல்குடி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் சல்மோன். மீனவர். இவரது மகன் ஆகாஷ் (வயது 14). இவன் விச்சூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு சொந்தமான வேனில் வீடு திரும்பினான்.

வேன் ஆகாஷ் வீட்டின் அருகே வந்து நின்றதும் அதில் இருந்து ஆகாஷ் இறங்கினான். அப்போது நிலைதடுமாறியதில் வேனின் பின்பக்க டயருக்கு அடியில் விழுந்தான். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கினார். இதில் சக்கரத்தில் சிக்கிய மாணவன் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வேனின் பின் பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மாணவன் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் கூறும் போது, வேன் படிக்கட்டில் உடைந்த கம்பி நீண்டு கொண்டு இருந்ததால்தான், ஆகாஷ் கீழே விழுந்தான், எனவே இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவர் வடக்கு மணமேல்குடியை சேர்ந்த கூத்தன் மகன் அய்யப்பன் என்பவரை தேடி வருகின்றனர்.

Similar News