செய்திகள்

ஈரோட்டில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம்

Published On 2016-07-27 04:25 IST   |   Update On 2016-07-27 04:25:00 IST
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கட்டிட தொழிலாளியின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானம் செய்யப்பட்டன. நுரையீரல், சென்னையில் உள்ள நோயாளிக்கு பொருத்துவதற்காக விமானத்தில் கொண்டு வரப்பட்டது.
சென்னை:

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜோதிகுமார் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி.

ஜோதிகுமார் கடந்த 24-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சித்தோடு நோக்கி சென்றார். கனிராவுத்தர்குளம் அருகே எல்லப்பாளையம் பகுதியில் அவர் சென்றுகொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜோதிகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜோதிகுமார் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருந்ததால் அவர் ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் ஜோதிகுமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை டாக்டர்கள் நேற்று கண்டுபிடித்தனர். ஜோதிகுமாரின் மனைவி மற்றும் உறவினர்களிடம் டாக்டர்கள் இந்த தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து ஜோதிகுமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய மனைவி பாப்பாத்தியும், உறவினர்களும் முன்வந்தனர்.

ஜோதிகுமாரின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இதில் ஒரு சிறுநீரகம் ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.

நுரையீரல் சென்னையில் உள்ள லைப்லைன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்துவதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கல்லீரல் கோவை ஜெம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. 2 கண்களும் ஈரோடு அகர்வால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

Similar News