செய்திகள்

பொன்னமராவதியில் ஆசிரியர்களுக்கு செயல்வழி கற்றல் பயிற்சி

Published On 2016-07-25 21:18 IST   |   Update On 2016-07-25 21:18:00 IST
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.

பொன்னமராவதி:

பொன்னமராவதி வட்டார வளமையத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றலில் புரிதலை மேம்படுத்தும் புத்தாக்கப் பயிற்சியானது பொன்னமராவதி, நகரப்பட்டி, கொன்னையூர், ஆலவயல், காரையூர், சடையம்பட்டி, நல்லூர், மேலத் தானியம் ஆகிய 8 குறு வளமையங்களில் நடைபெற்றது. கொன்னையூர் குறு வளமையத்தில் நடைப்பெற்ற பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேன்மொழி துவக்கி வைத்தார்.

மேலும் இப்பயிற்சியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச் சந்திரன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமதிலகம், மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் குறித்து சிறப்புரையாற்றினர்.

அவர்கள் பேசும் போது, கல்வி கற்றல் என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. கற்றல் என்பது பாடநூல் வழியாக மட்டுமல்லாமல் பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து கற்றுக்கொள்ளும் முறைதான் எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல். எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றலில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் அட்டைகள் கொண்டும், பாட நூல் கொண்டும், புரொஜெக்டர் மூலம் விளக்கப்பட்டது.

உற்று நோக்கி பதிவு செய்தல், பரிசோதனை, களப்பயணம், சிந்தித்து செயல்படுதல், வலுவூட்டல், குழு விவாதம் , செயல்திட்டம், புத்தகப் பூங்கொத்து, புத்தகப் பயிற்சி, குறைதீர் கற்பித்தல் , ஆரோக்கிய சக்கரம் , கால நிலை அட்டவணை, பள்ளிகளில் கற்றலில் பின் தங்கியுள்ள மாணவர்களின் வாசித்தல், எழுதுதல் திறனில் மேம்படுத்த சிறப்புப்பயிற்சி வழங்குதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றலில் பள்ளிகளுக்கு தரநிலை வழங்கும் முறை பயிற்சித்தாள் கொண்டு விளக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வகுமார், அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, மதனகுமார், சரவணன், அழகுராஜா, சக்திவேல் பாண்டி, ரஹிமா பானு, புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் ராம கிருஷ்ணன், ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், சுந்தர்ராஜ், கிருஷ்ணன், கமல், புவனேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

Similar News