செய்திகள்

மயிலாடுதுறையில் சமஸ்கிருத மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2016-07-10 15:57 IST   |   Update On 2016-07-10 15:57:00 IST
மத்திய அரசு சமஸ்கிருத மொழி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை:

மத்திய அரசு சமஸ்கிருத மொழி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர அமைப்பாளர் ஜி.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் ஜெயராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய மனிதவள அமைச்சகம். விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி ஐ.ஐ.டி.களிலும், மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக திணித்து வருகிறது. அதேபோல் சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பன பண்பாட்டைத் திணிப்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும்.

அதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகளுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தியாவில் சமஸ்கிருதத்தை பேசும் மக்கள் கொண்ட மாநிலம் இல்லை, அது பேச்சு மொழியாகவும் இல்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை.

சமஸ்கிருதமொழியில் இந்தியாவில் ஒரு பத்திரிக்கை கூட வெளிவரவில்லை. சில ஆயிரம் பேர்கள் மட்டுமே அறிந்திருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட மொழி சமஸ்கிருதம் ஆகும். எனவே அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் அதிகார பூர்வ மொழியாக வைத்திருப்பதை மறுபரிசீலனை செய்து சமஸ்கிருதத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை மத்திய அரசு நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மு.அன்பரசன், மாவட்ட தலைவர் ம.மகாலிங்கம், நகர செயலாளர் ப.தமிழ்வேலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம் வழக்கறிஞர் சங்கர், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் கபூர். ஜாகீர்,எஸ்.டி.பி.ஐ. சபீக்அகமது கலந்துகொண்டனர். முடிவில் நகரதலைவர் நாஞ்சில் சங்கர் நன்றி கூறினார்.

Similar News