செய்திகள்

நாகை அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2016-07-01 16:16 IST   |   Update On 2016-07-01 16:17:00 IST
நாகை அருகே திருமணம் ஆகி 3 வருடத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

நாகப்பட்டிம்:

நாகையை அடுத்து திருக்குவளை நாட்டிருப்பு கீழதெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 27). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் உள்ள கலைமகள் (24) என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்களது காதலுக்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்கள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக காமராஜ் பகல்நேர பணிக்கும், கலைமகள் இரவு பணிக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கலைமகள் இரவு பணிக்கு சென்றதால் காமராஜ் அவர் மீது சந்தேகப்பட்டு கலைமகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கலைமகள் திருக்குவளையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பாட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கலைமகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்குவளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணம் ஆகி 3 வருடங்களே ஆன நிலையில் கலைமகள் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News