செய்திகள்

சீர்காழியில் கோவில் சுவரில் ஆபாச சுவரொட்டி: பொதுமக்கள் புகார்

Published On 2016-06-30 18:05 IST   |   Update On 2016-06-30 18:05:00 IST
சீர்காழியில் கோவில் சுவரில் ஆபாச சுவரொட்டி ஒட்டப்படுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார்.திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஸ்தலம் ஆகும்.

காசிக்கு அடுத்தபடியாக இக்கோவிலில் தான் அஷ்டபைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.பல்வேறு சிறப்புகளைக்கொண்ட சட்டைநாதர் கோவிலில் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் சுமார் 30 அடி உயரத்தில் மதில் சுவர்கள் உள்ளன.

இந்த மதில் சுவர்களுக்கு கடந்த ஆண்டுதான் புதிதாக வர்ணங்கள் பூசி, சிவசிவ என்று வாசகங்கள் எழுதப்பட்டன. ஆனால் தற்போது கோவில் மதில் சுவற்றில் ஆபாச,கவர்ச்சி திரைப்பட சுவரொட்டிகள், திருமண வாழ்த்து சுவரொட்டிகள், அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. குறிப்பாக மேற்கு பகுதி மதில் சுவற்றில் தான் அதிகளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேதனையை அளிக்கிறது. மேலும் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகளின் மனதை ஆபாசதிரைப்பட சுவரொட்டிகள் பாதிப்படைய செய்கிறது. எனவே கோவில் நிர்வாகம் காவல்துறை ஒத்துழைப்போடு சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்தி கோவிலின் புனித தன்மையை காக்கவேண்டும் என பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News