செய்திகள்

வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயற்சி: 2 பேர் சிக்கினர்

Published On 2016-06-28 15:58 IST   |   Update On 2016-06-28 15:58:00 IST
வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயற்சி செய்த கூலிப்படையினர் 2 பேர் சிக்கினர்.

சென்னை:

மறைமலைநகர் என்.எச்.2 கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமாறன். தொழில் அதிபர். தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் அவர் காரில் சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது எதிரே வந்த கார் திடீரென திருமாறன் வந்த கார் மீது மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த காரும் மோதி நின்றது.

காரில் இருந்த மர்ம நபர்களும், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களும் திருமாறன் வந்த கார் மீது 2 வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

உடனே அவர் கைத்துப் பாக்கியை எடுத்து கொலை வெறிகும்பலை நோக்கி சுட முயன்றார். இதனை கண்டு கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளையும், வெடிகுண்டு இருந்த பையையும் விட்டுச் சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த கொலை வெறிதாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இது குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த தாக்குதலில் 12 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. கூலிப்படையை சேர்ந்த அவர்களில் 2 பேர் போலீசில் சிக்கினர். கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே உயிர் தப்பிய திருமாறன் போலீசில் ஒரு புகார் அளித்தார் அதில், தொழில் பங்குதாரராக இருந்து தற்போது பிரிந்து மலேசியாவில் வசிக்கும் நண்பர் தூண்டுதலின் பேரில் கொலை முயற்சி நடந்ததாக தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News