செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

Published On 2016-06-25 17:47 IST   |   Update On 2016-06-25 17:47:00 IST
கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அரியலூர் கலெக்டர் சரவணவேல் ராஜ் தெரிவித்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000–க்கு மிகாமல் இருத்தல் வெண்டும்.

உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News