செய்திகள்

ரூ. 4.50 கோடி செலவில் தாம்பரம்-பெருங்களத்தூரில் 2 சுரங்க நடைபாதைகள்

Published On 2016-06-24 14:49 IST   |   Update On 2016-06-24 14:50:00 IST
பாதசாரிகள் வசதிக்காக ரூ. 4.50 கோடி செலவில் தாம்பரம்-பெருங்களத்தூரில் 2 சுரங்க நடைபாதைகளை ரெயில்வேதுறை அமைக்கிறது.
சென்னை:

தாம்பரம் ரெயில் நிலையத்தை முணையமாக மாற்றும் பணிகளை தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அனுபம் வர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிழக்கு தாம்பரம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கிழக்கு தாம்பரத்தையும் மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையையும் இணைத்து புதிய சுரங்க நடைபாதை ரூ. 2.8 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதை தற்போது இரண்டு சக்கர மற்றும் இலகு ரக வாகன போக்குவரத்துக்காக பயன்பாட்டில் இருக்கும் சுரங்கப்பாதை அருகில் சுத்தானந்த பாரதி தெருவில் அமைக்கப்பட உள்ளது.

மற்றொரு சுரங்கப்பாதை பெருங்களத்தூரில் பாத சாரிகள் வசதிக்காக ரூ.2.5 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இந்த 2 சுரங்கப்பாதைகளுக்கும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. அடுத்த மாதம் டெண்டர் கோரப்படும். இரு சுரங்கப் பாதைகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நின்று செல்ல பயன்படுத்தப்படும் 5 மற்றும் 6 மற்றும் 7, 8-வது பிளாட்பாரங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News