செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் படுகாயம்

Published On 2016-06-11 13:42 IST   |   Update On 2016-06-11 13:42:00 IST
ஜெயங்கொண்டம் அருகே வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே காக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சுப்ரமணி. வேன் டிரைவர்.

இவரது மினி வேனில் முருங்கைக் காய் லோடு ஏற்றிக் கொண்டு கும்பகோணம் – ஜெயங்கொண்டம் சாலையில் கோடங்குடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் சேவகத் தெருவைச் சேர்ந்த கணேசன் அதே ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மினி வேன் பின்னால் மோதியது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மினி வேன் டிரைவர் சுப்ரமணி தா.பழூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அதேபோல் ஜெயங்கொண்டம் அருகே கஞ்சங்கொல்லை ஆட்டுக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலைகாரணமாக அந்த பகுதியில் உள்ள சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லித்தோப்பு அருகே திருப்பனந்தாள் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் இந்த நிலையில் இவர் மீது சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணன் கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில், முருகன் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News