ஆசைவார்த்தை கூறி உல்லாசம்: இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த தானிப்பட்டு அருகே உள்ள சோனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. அவருடைய மனைவி விஜயா. இவர்களுடைய மகன் அசோக்குமார் (வயது 24). பொக்லைன் டிரைவர். இவரும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் செல்வி (25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
செல்வி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அசோக்குமார் சென்னைக்கு செல்வியை பார்க்க அடிக்கடி சென்றுள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்றதாகவும், அந்த சமயம் அசோக்குமார் திருமணம் செய்து கொள்வதாக கூறி செல்வியுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அசோக்குமாரிடம் கூறி உள்ளார். அதற்கு அசோக்குமார் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி உள்ளார்.
இதையடுத்து செல்வி, அசோக்குமார் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறி உள்ளார். அதற்கு அசோக்குமார் பெற்றோர் சாதியை காரணம் காட்டி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் செல்வியை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அசோக்குமார், ஜீவா, விஜயா ஆகியோர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஜீவா, விஜயா ஆகியோரை தேடி வருகின்றனர்.